அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மஹாவிஷ்ணு ஆமை வடிவம் தாங்கி மந்திர மலையைத் தாங்கினார். அவர் கச்சப (ஆமை) வடிவம் எடுத்து இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இங்குள்ள சிவனை வழிபட்டதால் இத்தலம் 'திருக்கச்சூர்' என்று வழங்கப்படுகிறது. இத்தலத்து மூலவரும் 'கச்சபேஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார். ஆலமரம் தல விருட்சமாதால் 'திருக்கச்சூர் ஆலக்கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரு சமயம் இந்திரன், முனிவர் ஒருவரின் சாபத்திற்கு ஆளாகி நோயால் அவதியுற்றான். தேவலோக வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள் கடும் முயற்சி செய்தும் நோயைக் குணப்படுத்த முடியவில்லை. எனவே, நாரத முனிவரின் ஆலோசனைப்படி இந்த நோயைக் குணப்படுத்தக் கூடிய மூலிகையைத் தேடி 'மருந்து மலை' என்னும் இத்தலத்திற்கு வந்து, லிங்க பூஜை செய்து வழிபட்டு மூலிகையைத் தேடினர். ஆனாலும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் மீது இரக்கம் கொண்ட அம்பிகை தேவையான மூலிகைச் செடியின் மீது ஒளியைப் பாய்ச்சி அடையாளம் காட்டினார். இதனால் மலைக்கோயிலில் உள்ள மூலவர் 'மருந்தீஸ்வரர்' என்றும், ஒளி காட்டியதால் அம்பிகை 'இருள்நீக்கி நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
அடிவாரத்தில் உள்ள கோயில் மூலவர் 'கச்சபேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன் சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'அஞ்சனாட்சி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். மலைக்கோயிலில் உள்ள கோயில் மூலவர் 'மருந்தீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், மேற்கு நோக்கி லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'இருள்நீக்கி அம்பாள்' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள விநாயகர் 'கருக்கடி விநாயகர்' என்றும் 'தாலமூல விநாயகர்' என்றும் அழைக்கப்படுகின்றார். மலைக்கோயிலின் பிரகாரத்தில் உள்ள சண்டேஸ்வரர் நான்கு முகங்களுடன் பிரம்ம சண்டிகேஸ்வரராக காட்சி தருகின்றார்.
அசுரர்களுடன் நடந்த போரில் தேவர்களுக்கு, முசுகுந்த சக்கரவர்த்தி உதவி செய்ததால் இந்திரனிடம் இருந்து பத்து தியாகராஜர் திருவுருவங்களைப் பெற்றார். அவற்றில் ஏழு திருவுருவங்களைத் திருவாரூரைச் சுற்றியுள்ள ஏழு இடங்களில் நிறுவினார். அவை 'சப்த விடங்கத் தலங்கள்' என்று அழைக்கப்படுகிறது. மற்ற மூன்று திருவுருவங்களை தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர், திருவான்மியூர், திருக்கச்சூர் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்தார். இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தியாகராஜரை 'அமிர்த தியாகர்' என்று அழைப்பர். இவர் ஆடும் நடனம் அஜபா நடனம். இங்கு மகாவிஷ்ணுவுக்கு பெருமான் நடனக் காட்சி காட்டியருளினார். இன்றும் திருவிழாவின்போது சித்ரா பௌர்ணமி அன்று தியாகராஜப் பெருமானின் நடனக் காட்சி நிகழ்கிறது.
சுந்தரர், இத்தலத்திற்கு வந்தபோது நண்பகல் வேளையாகி விட்டதால் அவருக்கு பசியெடுத்தது. அப்போது ஒரு முதியவர் வந்து, உமக்கு நான் சோறு கொண்டு வருகிறேன். அதுவரை இங்கேயே இருங்கள் என்று கூறினார். முதியவரின் வார்த்தையைக் கேட்ட சுந்தரரும் அவ்வாறே அங்கு அமர்ந்துக் கொண்டார். முதியவர் திருவோட்டை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று, பிச்சைக் கேட்டு உணவைப் பெற்று கோயிலுக்கு வந்து சுந்தரருக்கு உணவு அளித்து மறைந்தார். வந்தவர் சிவபெருமானே என்று உணர்ந்தார் சுந்தரர். சுந்தரருக்கு உணவை இரந்துப் பெற்ற காரணத்தால் 'இரந்திட்ட ஈஸ்வரர்' என்னும் திருநாமத்துடனும், உணவை வழங்கியதால் 'விருந்திட்ட ஈஸ்வரர்' என்னும் திருநாமத்துடனும் அடிவாரக் கோயிலில் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகிறார். சுந்தருக்கும் தனி சன்னதி உள்ளது.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். மலை அடிவாரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், மலையில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|